கீழடி நாகரிகம்

கீழடி அகழாய்வு தளம் என்பது சங்க கால நாகரிகம் கொண்ட ஒரு முக்கியமான பழமையான குடியிருப்பு தளம் ஆகும். இதை இந்திய தொல்பொருள் ஆய்வு கழகம் (ASI) மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து ஆய்வு செய்து வருகின்றன. இந்தத் தளம் தமிழ்நாட்டில், மதுரையிலிருந்து 12 கிமீ தென் கிழக்கில், சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமம் அருகில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில், இந்த இடம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலானது என்று கருதப்பட்டது. இந்தத் தளத்திலிருந்து 2017 ஆம் ஆண்டு இரண்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு கார்பன் (Carbon) பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 2017 ஜூலை மாதம் வெளியான முடிவுகளின்படி, இந்த மாதிரிகள் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்பதானவை (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) என்பதும் உறுதி செய்யப்பட்டது.